

வறட்சி நிவாரணப் பணிகளை கண்காணிக்க அனைத்துக்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்துக்குத் தேவையான வறட்சி நிவாரண நிதியை பெற வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கூடுதல் வறட்சி நிவாரண நிதி பெற அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பாரபட்சம் தவிர்க்கப்படும்
வறட்சி நிவாரண உதவிகள் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும்போது அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவினரின் மேற் பார்வையில் செயல்பட்டால் முறைகேடுகளும், பாரபட்சமும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.