Published : 01 May 2014 08:20 AM
Last Updated : 01 May 2014 08:20 AM

ஆம்னி பஸ் கட்டணம் இன்று முதல் உயர்வு: நடவடிக்கை எடுக்க அரசு முடிவு

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்படி ஏசி பஸ்களுக்கு 70 ரூபாயும், ஏர் பஸ்களுக்கு 40 ரூபாயும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி முறையான தகவல் இல்லை என்றும் சோதனையில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு இடங்களுக்கு தினமும் 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் டீசல் விலை உயர்வு, டயர் விலை, டோல்கேட் கட்டண உயர்வு ஆகிய காரணங்களால் ஆம்னி பஸ் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுகிறது.

பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து தமிழகத்திலும் பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்ஸுக்கு 40 ரூபாயும், படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்ஸுக்கு 70 ரூபாயும் உயர்த்தப்பட உள்ளன. இதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏர் பஸ்ஸில் கட்டணம் ரூ. 770 ல் இருந்து ரூ. 810 ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஏசி பஸ்சில் ரூ. 810 ல் இருந்து ரூ. 880 ஆக உயர்கிறது. இதுபோல், பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “டீசல், உதிரிபாகம், டயர் ஆகிய வற்றின் விலை உயர்வு, காப்பீட்டு தொகை அதிகரிப்பு, சுங்க சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால் தமிழகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. எனவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

போக்குவரத்து துறை எதிர்ப்பு:

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது,‘‘மக்களை பாதிக்கும் வகையில் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல. இது தொடர்பாக அரசிடம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. முறையான தகவலும் இல்லை. எனவே, ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தும்போது, கட்டண உயர்வு இருந்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x