

உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''தமிழகத்தின் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த ரிஃபாத் சாருக் என்பவர் தலைமையிலான 6 மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடையிலான கையடக்க செயற்கைக்கோளை தயாரித்துள்ளது.
மாணவர்கள் தயாரித்த இந்த மிகச்சிறிய செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் உள்ளது.இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய போட்டியில் 80,000 மாதிரிகளில் முதல் பரிசைப் பெற்றுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.
இந்த செயற்கைக்கோளிற்கு கலாம் சாட் என்ற பெயர் சாலப் பொருத்தமானது. காரணம் கனவு காணுங்கள், இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், என்று கூறிய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் இது போன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மத்திய. மாநில அரசுகள் மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் ஆக்கமும், ஊக்கமும் அளித்து அவர்களின் முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்து உலக அரங்கில் இந்தியாவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் மாணவர்கள் ரிஃபாத் சாருக், இவரது குழுவில் இடம்பெற்றுள்ள யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க்திவேதி, கோபிநாத் மற்றும் முகமது அப்துல் காசிப் ஆகியோருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த இவர்களது பெற்றோர்களுக்கும், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.