

தனக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு, நன்றி தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘ஜெயலலிதா ஜி, நீங்கள் மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு இனிதான எதிர்காலம் அமைய பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடன், அமைதியுடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா எழுதியுள்ள பதில் கடிதத்தில், "19.10.2014 தாங்கள் எனக்கு அனுப்பிய கடித்ததை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன். நீங்கள் காட்டியிருந்த அன்புக்கும், கருணை பொதிந்த உணர்வுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம் மட்டுமல்லாது தங்களது முயற்சிகளுக்கும் வெற்றி அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கவும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேனகாவுக்கு பதில்:
இதேபோல், மேனகா காந்திக்கும் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், "தங்களது கடிதம் என்னை நெகிழவைத்தது. மத்திய அமைச்சராக இருக்கும் தாங்கள், தங்களது பரபரப்பான அலுவல்களுக்கு இடையே என்னைப் பற்றி யோசிக்கவும், எனக்கு ஆறுதல் கூறவும் நேரத்தை கண்டறிந்து செயல்பட்டிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி. தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.