

பழைய நோட்டுகள் ரூ.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (35). இவர் தன்னிடம் இருந்த ரூ.70 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்தார். இதையறிந்து தி.நகரை சேர்ந்த ஒருவர், ஹரிஹரனை தொடர்பு கொண்டு பேசினார். 25 சதவீதம் கமிஷன் தொகை கொடுத்தால் புதிய நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட ஹரிஹரன் கடந்த 26-ம் தேதி மாலை ரூ.70 லட்சத்துடன் திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்றார். அங்கு காரில் வந்த 4 பேர், ஹரிஹரனை தாக்கி, ரூ.70 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஹரிஹரன் புகார் கொடுத்தார். மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் 10 பேர் இதில் ஈடுபட்டது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சென்னை பெருங்குடியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த உமாமகேஸ்வரன், நிசாருதீன், டில்லிபாபு, முருகேசன், வினோத், சதீஷ்குமார், சக்தி வேலு, ஜெயக்குமார் ஆகிய 8 பேர் நேற்று கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 4 டூவீலர்கள் மற்றும் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறை வாக இருக்கும் டார்வின், ஞானசேகரன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.