Published : 08 Apr 2017 11:07 AM
Last Updated : 08 Apr 2017 11:07 AM

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இல்லை; தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடாளுமன்ற மக்களவையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நான் எழுப்பிய வினாக்களுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் 'நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல், பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால், அத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கும் நிலங்கள் மீதான குத்தகை உரிமையை தமிழக அரசு மூலமாகத் தான் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடமிருந்து இத்திட்டத்தின் ஒப்பந்ததாரரான ஜெம் நிறுவனம் வாங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கான பணிகளை தொடங்குவதற்கு முன் மாநில அரசு/ சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியை இத்திட்டத்தின் ஒப்பந்ததாரரான ஜெம் நிறுவனம் பெற வேண்டும். இத்திட்டம் குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பொதுமக்கள் அனுமதித்தால் மட்டும் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேபோல், இத்திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும், உரிய அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட பிறகு திட்டப்பணிகள் தொடங்கும் என நான் எழுப்பிய மற்றொரு வினாவிற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நேர்மையாக நடந்து கொள்வதைப் போலக் காட்டிக் கொண்டாலும், இரு அரசுகளுமே மக்களை ஏமாற்றுகின்றன. இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில், அத்திட்டத்தை வரவிடாமல் தடுக்க தமிழக அரசும், பொதுமக்களும் இன்னும் கடுமையான போராடியாக வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நெடுவாசல் பகுதி மக்களிடம் கடந்த மார்ச் 1-ம் தேதி பேச்சு நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எந்த அனுமதியையும் தமிழக அரசு வழங்காது என்று உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால், பேச்சில் காட்டிய உறுதியை செயலில் காட்டவில்லை என்று தோன்றுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் 28-ம் தேதி டெல்லியில் கையெழுத்திடப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கோரி ஜெம் நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அத்துடன் அனுமதிக்கான கட்டணம் ரூ.12 லட்சத்திற்கான காசோலையையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷுக்கு ஜெம் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும் கையெழுத்திட்டு வாங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு எழுந்த பிறகு தான் ஜெம் நிறுவனத்தின் காசோலை திருப்பி அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இல்லை; தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. தமிழகத்தால் காலம்காலமாக எதிர்க்கப் பட்டு வந்த மதுரவாயல் - சென்னை துறைமுக பறக்கும் சாலைத் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், உதய் திட்டம், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவற்றை எப்படி மிரட்டி, தமிழக அரசின் மீது மத்திய அரசு திணித்ததோ, அதேபோல் இந்தத் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அச்சுறுத்தி திணித்து விடலாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசின் மிரட்டல்களுக்கு தமிழக அரசு பணிந்துவிடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விதிப்படி தான் செயல்படுகிறோம்; மக்கள் உணர்வுகளை மதித்து நடப்போம் என்று மத்திய அரசும், மக்கள் விருப்பப்படி இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என மாநில அரசும் கூறி வந்தாலும் இரு அரசுகளின் நோக்கம் என்பது மக்களை எப்படியாவது ஏமாற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி விட வேண்டும் என்பது தான்.

இத்திட்டத்தை தடுத்து நிறுத்தி மக்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே மாநில அரசுக்கு இருந்தால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சுரங்க குத்தகை உரிமம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (ஓ.என்.ஜி.சி) வழங்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஒருவேளை இதுவரை வழங்கப்படாவிட்டால் அதை வழங்க முடியாது என்று அறிவிக்க வேண்டும்.

அதேபோல், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் விஷயத்தில் அப்பகுதி மக்கள் அனைவரின் கருத்தையும் அறியும் வகையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அக்கூட்டத்தில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை ஏற்று சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது; அதுமட்டுமின்றி மக்கள் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், காரைக்காலுக்கு அருகில் நாகை மாவட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். இத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு மேலாக நடத்திய போராட்டங்கள் பயனற்றதாகிவிடும். விளைநிலங்கள் விரைவில் பாலைவனமாகிவிடும் .

எனவே, நெடுவாசல், நாகை மாவட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிப்பதில்லை என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர், அடுத்த வாரத்திலேயே தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அதை முறியடித்து இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு துணையாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசு செயல்பட வேண்டும்.

இதை செய்யத் தவறினால், நெடுவாசல் திட்டத்திற்கு எதிராக மக்களையும், இளைஞர்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். விளைநிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை என்ன விலை கொடுத்தாவது பாமக தடுத்து நிறுத்தும். இது உறுதி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x