சவுதியில் வேலையை இழந்து உணவின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுக: மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

சவுதியில் வேலையை இழந்து உணவின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுக: மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சவுதி அரேபியாவில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அந்த தனியார் நிறுவனம் கடந்த பல மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து திடீரென்று அவர்களை வேலையிலிருந்து நீக்கியதால் அவர்கள் உணவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி கொடுக்காததால், அவர்கள் முகாம்களில் தங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு இந்தியத் தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவையில் உள்ள சம்பளத்தை அவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.

உணவு, மருந்து பொருட்கள், தங்குமிட வசதி போன்ற அத்தியாவசியத் தேவைகள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்திடவும், மறு வேலை வாய்ப்பு வழங்கிடவும் சவுதி அரேபியா நாட்டுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் அங்குள்ள இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டால் மத்திய அரசு அவர்களை பத்திரமாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்து வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், இல்லையென்றால் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் வழங்கி உதவிட வேண்டும்.

இந்தியாவிலிருந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதாரண நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான்.

மத்திய அரசு நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும், அங்குள்ள நிறுவனங்களை ஆய்வு செய்து, அதனடிப்படையில் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in