

நீட் தேர்வு விவகாரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்துவிட்டனர் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்தி ரபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் இன்று (திங்கள்கிழமை) 'நீட்: இந்தியா எனும் கோட்பாட்டிற்கே அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையும், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கமும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.
இதில் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, '' சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்படும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்துவிட்டனர்.
நீட் தேர்வால் பணம் இல்லாதவர்கள் மருத்துவர்களாகிவிட முடியாது. மேலும், அரசு மருத்துவர்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள் எந்த வசதியும் இல்லாமல் வலிகளைப் பொறுத்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அவர்கள் முதுநிலை படிப்புக்கு தயாராக, தேர்வில் வெற்றிபெற, பயிற்சி பெற எந்த வசதியும் இல்லை. அப்படி இருக்கையில் அவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால்,இனிவரும் காலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற வரமாட்டார்கள். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழிந்துவிடும். அதற்குப் பிறகு கிராமங்கள் தோறும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாகும். அங்கு சிகிச்சை பெறுவதற்கு உரிய பணம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை நேரிடும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தமிழக அரசு நீட் தேர்விலிருந்து ஓராண்டு மட்டும்தான் விலக்கு கோருகிறது என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை நாடாளுமன்றத்தில் கூறியதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
90 எம்.எல்.ஏக்களின் பலம் கொண்ட ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரை சந்தித்திருக்கலாம். அதை ஸ்டாலின் செய்யாதது ஏன்?
தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது நல்ல விஷயம். ஆனால், அதற்கான அழுத்தத்தை தீவிரமாகக் கொடுக்க வேண்டும்'' என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசினார்.