Published : 18 Oct 2014 11:49 AM
Last Updated : 18 Oct 2014 11:49 AM

இன்னும் மூன்றே நாள்.. களைகட்டுகிறது தீபாவளி: பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம் - நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று முதலே புறப்படத் தொடங்கிவிட்டனர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் சிரமமின்றி பேருந்துகளில் செல்ல போக்குவரத்து, போலீஸ் துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களும் விடப்படுகின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஜவுளி, இனிப்புகள், பட்டாசு விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்ட வண்ணம் உள்ளனர். புதன்கிழமை தீபாவளி. சில அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திங்கள் மட்டும் விடுப்பு எடுத்தால் மொத்தமாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். எனவே, நேற்று முதலே ஏராளமானோர் புறப்படத் தொடங்கிவிட்டனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மொத்தம் 9,088 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று 501 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 501 பேருந்துகள், 19-ம் தேதி 699 பேருந்துகள், 20-ம் தேதி 1400 பேருந்துகள், 21-ம் தேதி 1652 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்கெனவே உள்ள 9 கவுன்ட்டர்கள் உட்பட மொத்தம் 25 சிறப்பு கவுன்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சிரமமின்றி முன்பதிவு செய்து வருகின்றனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் முதலே படிப்படியாக மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மாலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தவர்கள் பெருங்களத்தூரில் அதிக அளவில் காத்திருந்தனர்.

அரசு சிறப்பு பேருந்து ஏற்பாடு குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மேலும் 3 தற்காலிக நடைமேடை உருவாக்கப்பட்டுள்ளன. நடைமேடை 1, 2-ல் இருந்து விழுப்புரம், காஞ்சிபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும். நடைமேடைகள் 7, 8, 9-ல் நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கான முன்பதிவு இல்லாத பேருந்துகள் இயக்கப்படும். நடைமேடைகள் 3, 4, 5, 6-ல் முன்பதிவு செய்து நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு வரிசையாக டோக்கன் வழங்கப்பட்டு பேருந்துகளில் ஏற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளின் நேரம், தடம் எண், நடைமேடை எண் உள்ளிட்ட தகவல்களை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்க போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. அதிக அளவில் வரும் பேருந்துகளை நிறுத்திக்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப இயக்கப்படும். மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் பேருந்துகளை சீராக இயக்க ஆங்காங்கே போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விதிமுறை மீறினால் பர்மிட் ரத்து

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044- 24794709ல் பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும். விதிமுறைகளை மீறி இயக்கப்படும் மாற்றுப் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

300 போக்குவரத்து போலீஸார்

போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில் நடைமேடைகள் அதிகரிக்கவும், பேருந்துகள் எளிதாக உள்ளே சென்று வரவும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகனங்களை முறைப்படுத்தி இயக்க போக்குவரத்து போலீஸார் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு புறநகர் எல்லையைக் கடக்கும் வரை எந்த இடத்திலும் நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி இயக்கும் பணியில் 29 இன்ஸ்பெக்டர்கள், 129 எஸ்ஐக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் ஈடுபடுவார்கள். பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

வழக்கமான ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே முடிந்திருந்த நிலையில், அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் உடனுக்குடன் முன்பதிவு முடிந்துவிட்டது. நேற்று புறப்பட்டுச் சென்ற ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று ரயில்களில் ஏறிச் சென்றனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் வழக்கமான எண்ணிக்கையைவிட 3 மடங்கு கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இதற்கிடையே, வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 300-க்கு மேல் உள்ளது. இதற்காக பல்வேறு கட்டமாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் கொண்ட பிரீமியம் ரயில்கள், ஏசி வசதி பெட்டிகள் கொண்ட சிறப்பு விரைவு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இதுதவிர, தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்பு முழுக்க முழுக்க பொதுப் பெட்டிகள் கொண்ட ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x