

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 1916-ல் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித் தமிழ் இயக்கம், தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி, வடமொழி உள்ளிட்ட பிற மொழிகளின் கலப்பினால் சீரழிந்து கிடந்த தமிழ் மொழியின் தூய்மையைக் காத்தது.
தமிழர்களுக்கும், ஊர்களுக்கும் சூட்டப்பட்டிருந்த பிற மொழிப் பெயர்களை நீக்கி, தமிழ்ப் பெயர் களைச் சூட்டுதல், தமிழிசை இயக்கம், தமிழே ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி ஆகியவற்றுக் காக எழுந்த கிளர்ச்சிகள், திருக்குறளை தமிழ் மறையாக ஏற்றுக்கொண்டது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற பிற்கால இயக்கங்கள், எழுச்சிகள் அனைத்துக்கும் தனித் தமிழ் இயக்கமே வழிகாட்டியது.
இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை 2016-ம் ஆண்டு முழு வதும் கொண்டாடுமாறு, உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதையொட்டி, இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கில் ஜூலை 15, 16, 17-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், தனித் தமிழ் இயக்க நூல்கள் - இதழ்கள் கண் காட்சி, நூல்கள் வெளியீட்டு விழா, உலகப் பெருந்தமிழர் விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
தமிழறிஞர்கள், மானுடவியலா ளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட பல் வேறு துறை சார் வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். மூன்றாம் நாளில் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-வது மாநாடு நடைபெறுகிறது என்றார்.