

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக் கான கேள்விகளை முன்கூட்டியே வழங்கக் கோரி வி.கே.சசிகலா தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் கேள்விகளை முன்கூட்டியே தனக்கு வழங்கக் கோரி சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாகிர் ஹுசைன், கேள்விகளை முன்கூட்டியே வழங்க சட்டத்தில் இடமில்லை எனக்கூறி மனுவை நேற்று தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.