ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு பாஜக காரணம் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பணம் பட்டுவாடா செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்ற நிலை ஏற்படும்போது தேர்தலை நடத்துவோம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இனிவரும் தேர்தல்கள் நேர்மையாக நடைபெறும் என நம்புவோம்.
பணப் பட்டுவாடா அதிகமாக நடந்திருப்பதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், தொடக்கத்திலேயே கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தொண்டர்களின் நேரம், உழைப்பு அனைத்தும் வீணாகியுள்ளது. இனிவரும் தேர்தல்கள் நியாயமாக நடக்க ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காகவே திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்ய வைத்துவிட்டார்கள் என பாஜக மீதும், மத்திய பாஜக அரசு மீதும் எவ்வித அடிப்படையும் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் ரத்துக்கு எந்த விதத்திலும் பாஜக காரணம் அல்ல. தேர்தல் ரத்து ஒரு ஜனநாயகப் படுகொலை என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்தவரே இப்படி கூறுவது வேடிக்கையானது.
மக்களின் ஆதரவுடன் பல மாநிலங்களில் பலம் வாய்ந்த கட்சியாக மாறிவரும் பாஜகவுக்கு வேறு வழிகளில் பலம் பெற வேண்டிய அவசியம் இல்லை'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
