ரேஷன் கடை பெண்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?- அமைச்சர் காமராஜுக்கு மா.சுப்பிரமணியன் கண்டனம்

ரேஷன் கடை பெண்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?- அமைச்சர் காமராஜுக்கு மா.சுப்பிரமணியன் கண்டனம்
Updated on
2 min read

ரேஷன் கடைகளின் முன்பு நடக்கும் பெண்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் உணவு அமைச்சர் அறிக்கை விடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பருப்பு வாங்க டெண்டர் விட்டு, இன்னும் ஒரு வாரத்தில் சப்ளை செய்யப்பட்டு விடும்' என்பதை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிந்து கொண்டு திமுகவின் சார்பில் ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் நடத்துவதாக அளந்து விட்டு, ஸ்டாலின் மீது குறை கூறியிருக்கிறார்.

ரேஷன் கடைகளில் பருப்பு இல்லை, பாமாயிலும் இல்லை என்பதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதும், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு இருப்பதும் உணவுத்துறை அமைச்சர் உறக்கத்தில் இருப்பதால் கவனிக்கவில்லை என்றே கருதுகிறேன். தினமும் 'ரேஷன் கடையில் பருப்பு இல்லை என்கிறார்கள்' என ரேஷன் கடைகளின் முன்பு நடக்கும் பெண்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் உணவு அமைச்சர் அறிக்கை விடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்கவில்லை என்பதை முதன் முதலில் தமிழகத்தில் வெளிக்கொண்டு வந்தவர் ஸ்டாலின் தான். அதன் பிறகு அவரே நேரடியாக தன் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் குறை கேட்டவர் ஸ்டாலின். ரேஷன் கடைகளுக்கு வந்திருந்த குடும்ப அட்டைதாரர்களை சந்தித்துப் பேசி, ரேஷன் கடைகளில் உள்ள ஸ்டாக் புத்தகத்தை பார்வையிட்டு பருப்பு, பாமாயில் இல்லை என்ற தகவலை ஆதாரத்துடன் வெளிக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்.

இதன் பிறகு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை எல்லாம் தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைக்கு அனுப்பி நேரடியாக பார்வையிட வைத்து அறிக்கை பெற்று வைத்திருப்பவர் ஸ்டாலின். ஆகவே ரேஷன் கடைகளிள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியதும், அதைக் கண்டித்து 13 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டத்தை நடத்த ஆணையிட்டிருப்பதும் ஆதாரங்களின் அடிப்படையிலானது. அமைச்சர்களின் அறிக்கைகள் போலவோ, பொய்யான பேட்டிகள் போலவோ அல்ல என்பதை உணவு அமைச்சர் காமராஜ் புரிந்து கொள்ள வேண்டும்.

பாமாயில், பருப்பு பல இடங்களில் பத்து மாதத்திற்கும் மேலாக கிடைக்கவில்லை. சில இடங்களில் வருடக்கணக்கில் கிடைக்கவில்லை என்றெல்லாம் மக்கள் போராடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ரேஷன் கடைகள் அனைத்திலும் கடந்த இரு மாதங்களாக பருப்பு, பாமாயில் ஸ்டாக் இல்லை என்று குடும்ப அட்டை தாரர்களே கொந்தளித்து அவை எல்லாம் பேட்டியாக தொலைக்காட்சிகளில் வந்த பிறகு, ஸ்டாலின் போராட்டம் அறிவித்த பிறகு அவசர அவசரமாக டெண்டர் கோரியிருக்கும் உணவு அமைச்சர் இத்தனை மாதங்கள் ஏன் தூங்கி வழிந்தார்?

அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வதில் அதீத விசுவாசம் காட்ட கூவத்தூரில் முகாமிட்டிருந்தாரா? இரண்டு மாதங்களாக பருப்பு, பாமாயில் இல்லை என்கிற போது டெண்டர் விடுவதை ஏன் தாமதித்தார்? அந்த தாமதத்திற்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?

ஸ்டாலினின் போராட்ட அறிவிப்பால் நிலைகுலைந்து போயிருக்கும் 'பினாமி அரசு' அமைச்சர், பொறுப்பற்ற முறையில் அறிக்கை விட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டாலினின் போராட்ட அறிவிப்பிற்கு பிறகு டெண்டர் விடுவதில் அக்கறை காட்டியிருக்கும் அமைச்சர் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கால் கடுக்க காத்திருக்கும் தாய்மார்களின் குறைகளை போக்க, உடனே அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in