கருணாநிதியின் பேரவை வைர விழா கோலாகலம்: ராகுல், நிதிஷ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஒரே மேடையில் திரண்டனர்

கருணாநிதியின் பேரவை வைர விழா கோலாகலம்: ராகுல், நிதிஷ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஒரே மேடையில் திரண்டனர்
Updated on
2 min read

அரசியல் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் அரசியல் சாதனையை இந்தியாவில் வேறு யாராலும் முறியடிக்க முடியாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடந்த விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மஜித் மேமன் உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசினர்.

விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:

கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். அவர் மேலும் பல பிறந்த நாள் விழாவை கொண்டாட வாழ்த்துகிறேன். நாம் மிக அதிகமாக ஒருவரை நேசிக்கும்போது நமக்கு பலம் கிடைக்கும். அதுபோல நாம் ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படும் போது எதையும் செய்யும் துணிவு கிடைக்கும் என்று அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியை கோடிக்கணக்கான மக்கள் நேசிக்கின்றனர். தமிழக மக்களை கருணாநிதி ஆழமாக நேசிக்கிறார். இந்த வலிமையும், துணிவும்தான் கருணாநிதியின் அறிவாற்றலாக திகழ்கிறது. மக்களின் துயரங்களை அவர் புரிந்துகொள்ளவும், அவர்களது கஷ்டங்களை கேட்கவும் இதுதான் காரணம்.

கருணாநிதி தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசியலில் முக்கிய இடத்தை வகிப்பதாக உமர் அப்துல்லாவும், நிதிஷ்குமாரும் கூறினார்கள். 5 முறை முதல்வராகவும், 60 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் கருணாநிதி இருந்துள்ளார். இந்தச் சாதனையை இந்தியாவில் வேறு யாராலும் முறியடிக்க முடியாது.

தமிழக மக்களின் குரலாக கருணாநிதியின் குரல் ஒலிக்கிறது. தங்களின் உணர்வுகளைத்தான் அவர் பிரதிபலிக்கிறார் என மக்கள் நம்புகின்றனர். இதுவே அவரது வெற்றிக்கு காரணம். சரத்பவாரின் பேச்சு மகாராஷ்டிரா மக்களின் குரலாகவும், நிதிஷ்குமாரின் பேச்சு பிஹார் மக்களின் குரலாகவும், மம்தா பானர்ஜியின் பேச்சு மேற்கு வங்க மக்களின் குரலாகவும் ஒலிக்கிறது. அதுபோல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.

இங்கே மேடையில் உள்ள தலைவர்களின் பேச்சில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவே பேசுகிறோம். மக்களிடம் இருந்தே நாங்கள் அனைத்தையும் பெறுகிறோம் என்பதை உணர்ந்துள்ளோம். கடந்த 70 ஆண்டுகளாக தினமும் மக்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுகிறார். கற்பனையாக அவர் எதுவும் எழுதுவதில்லை. மக்களின் எண்ணங்களை, உணர்வுகளையே தனது எழுத்தில் பிரதிபலிக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர் களுக்காக அவர் எழுதுகிறார்.

தமிழ்மொழி, கலாச்சாரம், பண்பாடு இந்தியா முழுவதும் கலந்திருப்பதாக இங்கே வந்துள்ள அனைவரும் உணர்கிறோம். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் இறுமாப்போடு கட்டளையிட விரும்பவில்லை. நாட்டில் உள்ள அனைவரது பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஆனால், சிலர் எதிர்தரப்பினரின் கருத்துகளை கேட்காமல் அழிக்க நினைக்கிறார்கள். பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவெடுத்து ஒரே நாளில் 130 கோடி மக்களின் பைகளில் இருந்த பணம் செல்லாது என அறிவித்தார்.

பணமதிப்பு நீக்கத்தால் இந்தியா வின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உலகம் முழுவதும் சொல்கின்றனர். ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மட்டும் மறுக்கிறார். தாங்கள் நினைக்கும் ஒரே பாதையில் மட்டுமே இந்தியா செல்ல வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். ஒரே கலாச்சாரம் மட்டுமே இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் ஒவ்வொ ருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கோடிக்கணக்கான மக்களின் குரல் நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. வருங் காலத்தில் மாபெரும் தலைவரின் இடத்தை அவர் நிரப்ப வேண்டி யிருக்கிறது. ஸ்டாலின் சரியான பாதையில் பயணித்துக் கொண்டி ருக்கிறார். இன்று நாம் கருணா நிதியை பாராட்டுவதுபோல ஒரு காலத்தில் ஸ்டாலினையும் பாராட்டுவோம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பிரணாப், சோனியா வாழ்த்து

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in