கொளத்தூர் மணி மீதான தே.பா. சட்டத்தை ரத்து செய்க: வைகோ

கொளத்தூர் மணி மீதான தே.பா. சட்டத்தை ரத்து செய்க: வைகோ
Updated on
1 min read

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவை நேரில் சந்தித்த ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, கொளத்தூர் மணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்துச் செய்யுமாறு வேண்டியுள்ளார்.

அதற்கு உள்துறை அமைச்சர் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து தன்னால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்வதாக உறுதி அளித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட்டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்தபோது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார்.

அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து, பொய் வழக்குப் போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளையை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே அவர்களிடம் தொலைபேசியில் நான் பேசினேன். இந்தியாவில் சமூக நீதியை, பகுத்தறிவை நிலையாட்டிய தந்தை பெரியாரின் கொள்கை வீரர்தான் கொளத்தூர் மணி. கொள்கைக்காகவும், தமிழர்கள் உரிமைக்காவும் போராடி பலமுறை சிறை சென்றவர். அவர் எந்த வன்முறையிலும் எப்போதும் ஈடுபட்டது இல்லை.

தற்போது, அண்ணா தி.மு.க. அரசு, காவல்துறையின் மூலம் கொளத்தூர் மணி மீது பொய்வழக்குப் போட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தையும் ஏவியுள்ளது. வழக்கின் முதல் தகவல் அறிக்கையும், காவல்துறையினர் பொய்யாகப் புனைந்த வழக்கின் கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டால் உண்மை புலப்படும், என கூறியுள்ளார்.

எனவே, தேசப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுகிறேன்.இதுகுறித்து நேரில் விளக்க ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியை, உங்களைச் சந்திக்க அனுப்பி வைக்கிறேன் என்று தொலைபேசியில் கூறியதோடு, இதுகுறித்த விளக்கமான கடிதத்தையும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பினேன். இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in