Published : 19 Aug 2016 08:43 AM
Last Updated : 19 Aug 2016 08:43 AM

எடை குறைந்த குழந்தைகளின் சிகிச்சைக்காக 44 இடங்களில் ‘கங்காரு’ தாய்சேய் சேவை மையங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

எடை குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் 2 உட்பட 44 மையங்களில் ‘கங்காரு’ தாய் சேய் சேவை மையங்கள் நிறுவப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறி வித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாத முடிவில் அவர் பதிலளித்து பேசியதாவது:

தமிழகத்தில் அனைவருக்கும் நல்வாழ்வு முழுமையாக உறுதி செய்யப்பட்டு, நல்வாழ்வு குறியீடு களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்காக ரூ.3 ஆயிரத்து 888 கோடி நிதி ஒதுக் கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சி யில் ரூ.9 ஆயிரத்து 73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-12-ல் எம்பிபிஎஸ் இடங்கள் 1,945 ஆக இருந்தன. இது கடந்த 5 ஆண்டுகளில் 810 இடங்கள் கூடுத லாக பெறப்பட்டு 2,755 இடங்களாக உள்ளன. இந்தியாவில் முதன்முத லாக கடந்த 2012-ல் உருவாக்கப் பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 14 ஆயிரத்து 761 மருத்துவம் மற்றும் மருத் துவம் சாரா பணியாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். தற்போது 1,947 செவிலியர்கள் நியமிக்கப்பட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில், இதுவரை 1.58 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு ரூ.3,221 கோடியில் 15.56 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத னால் அரசு மருத்துவமனைகள் மட்டும் ரூ.1,148 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. திமுக காலத்தில் இருந்த பழைய காப்பீட்டுத் தொகை யில் ரூ.14 கோடி மட்டுமே ஈட்டப் பட்டது. உடல் உறுப்பு அறுவை சிகிச்சையிலும் தமிழகம் முதலிடத் தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.280 கோடியில் 3 ஆயிரத்து 791 பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அம்மா ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்பட்டு 5 மாதங்களில், 5 லட்சம் பேர் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர்.

புதிய திட்டங்கள்

குடிசை வாழ் மக்களுக்காக சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று என 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ரூ.2.70 கோடியில் உருவாக்கப்படும். குழந்தைகள் நல பரிசோதனைக்கென, சென்னை மாநகராட்சியில் 15 மற்றும் கோவை, மதுரையில் தலா 3, திருச்சி, சேலம், திருப்பூரில் தலா 2 என 27 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

மலைப் பகுதிகளில் வசிக் கும் மக்களிடையே ரத்தம் தொடர் பான குறைபாடுகளைக் கண் டறிந்து உரிய தடுப்பு நட வடிக்கைகளை எடுக்க ரூ.2.16 கோடி செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத் தில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகம் உள்ள 10 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கு வலி மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு சேவை திட்டம் ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில், தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்காக, இணையதளம் அடிப்படையிலான தொற்று நோய் அறிவிப்பு முகமைகள் திட்டம் ரூ.2.98 கோடியில் ஏற்படுத்தப்படும். சிறப்பு இளம் சிசு பராமரிப்பு மையங்களில் இருந்து விடுவிக்கப்படும் எடை குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் 42 தாய்சேய் நல மையங்கள் மற்றும் சென்னை யில் 2 என 44 மையங்களில் ‘கங்காரு’ தாய் சேய் சேவை மையங்கள் ரூ.64 லட்சத்தில் நிறுவப்படும்.

‘நான் உங்களுக்கு உதவலாமா’ சேவை மையங்கள் மற்றும் மின்கலத்தால் செயல்படும் ஊர்தி வசதிகள் அரசு உயர்நிலை மருத்துவமனைகளில் உள்ளன. இவை படிப்படியாக மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x