ராம்குமார் பிரேத பரிசோதனையை அக்.1-க்குள் முடிக்க உத்தரவு

ராம்குமார் பிரேத பரிசோதனையை அக்.1-க்குள் முடிக்க உத்தரவு

Published on

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை அக்டோபர் 1-ம் தேதிக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி இறந்தார். இவரது உடல் கடந்த 6 நாட்களாக பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராம்குமாரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் பிரேதப் பரிசோதனைக் குழுவில் தங்களது தரப்பு தனியார் மருத்துவரையும் அனுமதிக்க கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே தனி நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய 2வது அமர்வு ஆகியவற்றைக் கடந்து மீண்டும் தனி நீதிபதியான என்.கிருபாகரன் முன்பு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘ கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 4 பேர் குழுவுடன், 5வது நபராக புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் ராம்குமாரின் உடலை வரும் செப்டம்பர் 27-ம் தேதிக்கு முன்பாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்’’ என நேற்று முன்தினம் உத்தரவி்ட்டார்.

தங்களது தரப்பு கோரிக்கை இன்னும் ஏற்கப் படாதது குறித்து நேற்று மதியம் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பாக முறையிட்ட ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள், இதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக்கோரினர். அதையேற்க மறுத்த தலைமை நீதிபதி, ‘‘இதற்கு மேல் நீங்கள் உச்சநீதிமன்றம் சென்று தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ எனக்கூறினார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய உள்ளதால், அதுவரை ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என அரசு தரப்புக்கு உத்தர விடக்கோரி நேற்று மீண்டும் நீதிபதி என்.கிருபா கரன் முன்பு ராம்குமாரின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர் அப்போது நீதிபதி என்.கிருபாகரன் ‘‘இறந்தவரின் உடலின் கண்ணியத்தை காக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து காலம் தாழ்த்தக்கூடாது’’ என கருத்து தெரிவித்து தனது சேம்பரில் வைத்து விசாரிப்பதாக கூறினார். ராம்குமார் உடலை வரும் 30-ம் தேதி வரை பாதுகாக்க வேண்டும். அக்டோபர் 1-ம் தேதிக்குள் உடற்கூறு பரிசோதனையை முடிக்க வேண்டும் என்று நேற்று இரவு உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in