ஆதார் எண் பெற்றுள்ள 15 வயது நிரம்பியவர் பயோமெட்ரிக் தகவல் அளிக்க வேண்டும்

ஆதார் எண் பெற்றுள்ள 15 வயது நிரம்பியவர் பயோமெட்ரிக் தகவல் அளிக்க வேண்டும்
Updated on
1 min read

ஆதார் எண் பெற்றுள்ள 15 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது உயிரியத் தகவல்களை (பயோ மெட்ரிக்) அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மின் ஆளுமை இயக்குநரக இயக்குநர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு ஆதார் எண் வழங்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 545 நிரந்தர சேர்க்கை மையங்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

மத்திய அரசு கடந்த 2016 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று பதினைந்து வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரியத் தகவல்களை (பயோமெட்ரிக் தகவல்கள்) 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்.

எனவே, மேற்கூறிய ஆதார் வழிமுறைகளின்படி பொதுமக்கள் செயல்பட ஏதுவாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு 4-ம் தேதி (இன்று) முதல் நேரில் சென்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரியத் தகவல்களை அளிக்க வேண்டும். இச்சேவை கட்டணமில்லா சேவையாகும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in