Published : 05 Jun 2017 10:24 AM
Last Updated : 05 Jun 2017 10:24 AM

மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை 14-ம் தேதி கூடுகிறது: ஜிஎஸ்டி உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கலாகின்றன

அரசுத் துறைகள் வாரியான மானியக் கோரிக்கைகளை விவாதித்து நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மாநில ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. அன்று 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, மார்ச் 24-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடந்தது. அதில் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருந்ததாலும் இந்த ஆண்டு பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மானியக் கோரிக்கை களை நிறைவேற்றவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பேரவைத் தலைவர் மற்றும் செயலாளரிடம் மனுவும் அளித்தனர்.

இதற்கிடையே, பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து கடந்த மாதம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. திமுக சார்பில் முதல்வர் கே.பழனிசாமி, பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகி யோரை சந்தித்து பேரவைக் கூட்டத்தை நடத்த மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. அதன் படி, கடந்த 10 நாட்களாக முதல்வர் கே.பழனிசாமி தலை மையில் துறைகள் தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. தொடர்ந்து, துறை களுக்கான மானியக் கோரிக்கை புத்த கங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பேரவை செயலர் ஓய்வு

எப்போது வேண்டுமானாலும் சட்டப் பேரவை கூட்டப்படலாம் என்றிருந்த நிலை யில், பேரவைச் செயலாளராக இருந்த அ.மு.பி.ஜமாலுதீன் மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். சட்டப்பேரவைச் செயலக கூடுதல் செயலாளராக இருந்த கே.பூபதி, சட்டப்பேரவையின் பொறுப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் 14-ம் தேதி தொடங்கும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவை பொறுப்பு செயலாளர் கே.பூபதி நேற்று வெளியிட்டார். அதில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174-ன்கீழ், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜூன் 14-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பேரவை கூட்ட அரங்கில், சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடர் தொடங்குவது தொடர்பான தகவல் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பேரவை செயலகம் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்

கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, அதில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நிகழ்வுகள் தொடர்பாக பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும். பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முதல்வர், மூத்த அமைச்சர்கள், அரசு கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி கொறடா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர். வழக்கமாக பேரவை தொடங்கும் நாளில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும்.

மானியக் கோரிக்கை விவாதம் என்பதால், முன்கூட்டியே வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்க உள்ளதாகவும், 30 முதல் 40 நாட்கள் வரை கூட்டத் தொடர் நடக்கும் என்றும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மசோதாக்கள் நிறைவேற்றம்

இந்தக் கூட்டத்தொடரில் மாநில ஜிஎஸ்டி மசோதா, ரியல் எஸ்டேட் தொடர்பான விதிமுறைகளுக்கான திருத்தம், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் தகுதி, காலவரை யறை தொடர்பான திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை தற்போது ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகளுடன் தினகரன் அணி என்ற மூன்றாவது அணியும் உருவாகி யுள்ளது. இந்த நிலையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை, கடும் வறட்சி, பால் கலப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும். இதனால், இந்தக் கூட்டத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x