

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. அன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஜூலை 25 முதல் 29-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும், வாக்கெடுப்பும் நடைபெற்றது.
ஆகஸ்ட் 22-ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார். பேரவை விதி 110-ன் கீழ் பல்வேறு துறைகளின் முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்.
மொத்தம் 28 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவு பெறுகிறது. பேரவையில் இன்று பொதுத்துறை, பணியாளர் நலன், சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். பல்வேறு சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
9 மாதங்கள் பேறுகால விடுப்பு:
அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குப வர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அவர்கள்தான். அரசு ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது. 1980-ம் ஆண்டு முதல் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 90 நாட்களாக இருந்தது. இது 2011-ல் அதிமுக ஆட்சியில் 6 மாதங்களாக உயர்த்தப்பட்டது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில், ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தப் படும்’ என வாக்குறுதி அளித்திருந் தோம். அதை செயல்படுத்தும் விதத்தில், அரசுப் பணியில் உள்ள தாய்மார்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்படும். இதன்மூலம் அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணிப் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
அதன்பிறகு வருவாய் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி (விளவங்கோடு) பேசும்போது, ‘‘அரசு ஊழியர் களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த 9 மாத விடுப்பை கருவுற்ற நாள் முதல் குழந்தையின் ஒரு வயது முடியும் வரையிலான காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். 2 மாதங்கள் விடுப்பு, பிறகு 2 மாதங்கள் பணி என தேவைப்படும் காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் 9 மாத மகப்பேறு விடுப்பு கிடைக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்த சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, ‘‘பிரசவிக்கும் தாயின் உடல் நலமும், பிறக்கும் குழந்தையின் உடல் நலமும் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. தொடர்ச் சியாக 9 மாதங்கள் விடுப்பு எடுத்தால் மட்டுமே தாயின் உடல் நலம் பேணப்படும். எனவே, விட்டு விட்டு மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதிப்பது சாத்தியமற்றது. இதனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும்’’ என்றார்.