Published : 03 Jun 2017 08:32 AM
Last Updated : 03 Jun 2017 08:32 AM

இலக்கியம் ஒரு கவிதையை இழந்துவிட்டது!- கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

ஒரு கவிதை ஆலமரம் சாய்ந்துவிட்டது. மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் கட்டப்பட்ட ஒரு தங்கப் பாலம் தகர்ந்துவிட்டது. இஸ்லாமிய சமுதாயம் தமிழுக்கு வழங்கிய பெருங்கொடைகளுள் ஒன்று தொலைந்துவிட்டது.

கவிக்கோ அப்துல்ரகுமான் அறுபது ஆண்டு களாய்த் தமிழோடு இயங்கியவர்; தமிழாக விளங் கியவர். நாங்களெல்லாம் கலைஞரின் கவியரங்கக் குடும்பத்து உறுப்பினர்கள். அப்துல் ரகுமான் இல்லாத கவியரங்கம் சொல் இல்லாத மொழி போன்றதாகும். எல்லாக் கவியரங்குகளிலும் வெற்றிக் கொடி பறக்கவிட்ட வித்தகக் கவிஞர் அவர்.

‘வெற்றி பல கண்டு நான்

விருது பெற வரும்போது

வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால்

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’

- என்று கலைஞரால் கொண்டாடப்பெற்ற கவிச் சிகரம் அவர்!

கவிஞராய் பேராசிரியராய் மார்க்க அறிஞராய் சுவையான சொற்பொழிவாளராய்ப் பன்முகம் காட்டிய படைப்பாளி கவிக்கோ.

மூன்று காண்டங்களில் இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரத்தை கவிக்கோ இரண்டே வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.

‘பால்நகையாள் வெண்முத்துப்

பல்நகையாள் கண்ணகியாள்

கால்நகையால் வாய்நகைபோய்

கழுத்துநகை இழந்த கதை’

- இது அவரது மரபுக் கவிதைக்கு மாறாத சாட்சி.

“வேலிக்கு வெளியே

தலையை நீட்டிய

என் கிளைகளை வெட்டிய

தோட்டக்காரனே!

வேலிக்கு அடியில்

நழுவும் என் வேர்களை

என்ன செய்வாய்?”

- இது அவரது புதுக்கவிதையின் மாட்சிக்கு சாட்சி.

கல்லூரியில் ‘கவி ராத்திரி’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான கவிஞர்களை உருவாக் கிய கவிதைத் தொழிற்சாலை கவிக்கோ. வாணியம்பாடி யின் வானம்பாடி என்று கொண்டாடத்தக்கவர்.

உலகக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தமிழின் தங்க நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தவர். கவிதைகளில் படிமங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற அறிஞர் அவர். “நீங்கள் ஏன் சினிமாவுக்குப் பாட்டெழுதவில்லை” என்று கேட்டபோது “அம்மி கொத்தச் சிற்பி எதற்கு?” என்று அழகாகத் திருப்பிக் கேட்டவர்.

நான்கு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் என்னை அழைத்தார். “தைரியமாக இருங்கள்” என்றேன். “மரணத்தைப் புரிந்துகொண்டேன்; எனக்கு பயமில்லை” என்றார். “உங்களைப் பார்க்க வேண்டும்” என்றேன். “என் வீட்டுக்குப் போனதும் சொல்லியனுப்புகிறேன்” என்றார். அவர் வீட்டுக்குப் போனதும் சொல்லியனுப்பிய செய்தி இதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்க்கவில்லை நான்.

இலக்கியம் ஒரு கவிதையை இழந்துவிட்டது.

மார்க்கம் ஓர் அறிஞனை இழந்துவிட்டது.

நான் என் மூத்த சகோதரரை இழந்துவிட்டேன்.

எங்கள் வாழ்வின் மிச்சம் அவர் கவிதைகளோடு பயணப்படும். மொழியோடு அவரது புகழ் வழிநெடுக வாழும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் இலக்கிய உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x