Published : 10 Sep 2016 06:13 PM
Last Updated : 10 Sep 2016 06:13 PM

பாகிஸ்தானின் தீவிரவாத அத்துமீறலை ஒடுக்க மத்திய அரசு தவறிவிட்டது: வாசன் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அத்துமீறலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாட்டின் எல்லைப் பகுதியில் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் வன்முறைச் சம்பவங்களும், உள்நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற சம்பவங்களும் நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற செயல்களாகும். பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது போன்ற பயங்கரவாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தீவிர நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஈடுபடவில்லை.

குறிப்பாக மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அத்துமீறலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தவறிவிட்டது. பாஜக வினர் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம், பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதில் தீவிர கவனம் செலுத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே மத்திய பாஜக அரசு நாட்டில் எந்த மாநிலத்திலும், தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் நம் நாட்டிற்குள் அண்டை நாடுகளின் ஊடுருவல் இல்லாமல் இருப்பதற்கு தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாத, தீவிரவாத நடவடிக்கைகளும், சீன நாட்டின் ஊடுருவல் முயற்சியும், உள் நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள், ஆந்திரா, கேரளா, தமிழக எல்லைகள், அசாம், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் நடைபெறும் தீவிரவாத, பயங்கரவாதச் செயல்கள், நக்சல்கள் போன்றவற்றால் பொது மக்கள் அச்சத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் வாழக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

பல நேரங்களில் இந்த அசம்பாவிதங்களால் பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள், பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள், உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். நம் நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் போன்ற செயல்களுக்கு பொது மக்களில் சிலர் துணை நிற்கிறார்கள் என்ற செய்தியும், அரசின் ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மருந்துபொருட்களை இந்த அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தியதாகவும் என்எஸ்ஜி - தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கின்றது. இந்த செய்திகள் மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நாட்டில் வேலை இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும், பொது மக்கள் மத்தியில் பாதுகாப்பின் அவசியத்தை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்த வேண்டும், சுய தொழில் புரிய விரும்புவோர்களுக்கு மானியத்துடன் கூடிய சலுகைகள் வழங்க வேண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், சமூக நலச் சேவையில் ஈடுபடுவோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

சட்டம், ஒழுங்கை கடுமையாக்கி குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும், நீதியை நிலைநாட்ட எந்த ரூபத்தில் தடங்கல் வந்தாலும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசோடும் இணைந்து செயல்பட்டு அண்டை நாடுகளிடமிருந்தும், உள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் ஆகியோர்களிடமிருந்தும் நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாத்திட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x