

பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அளித்த விளக்கம் போதுமானதல்ல என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில், சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அத்தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பணப் பட்டுவாடா நடைபெற்றதாக அப்போதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இச்சூழலில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக அமைச்சர் வீட்டிலும், நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர். இச்சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமைச் செயலாளருக்கும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதியன்று கடிதம் அனுப்பியது. இந்தக் கடிதத்தில் தமிழக முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் பெயர்கள் இடப்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா, விசாரணை நடைபெற்றதா போன்ற செய்திகள் வெளிவராமல் இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பணப் பட்டுவாடா சம்பந்தமாக கேள்வி எழுந்தபோது, பணப் பட்டுவாடா தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தின் புகாரின் அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார். இந்த விளக்கம் போதுமானதல்ல.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பணப் பட்டுவாடா தொடர்பாக தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதா, அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அன்று முதல் இன்றுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. மேலும் தமிழக தேர்தல் ஆணையமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு ஏற்ப எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும்.
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதால் ஆர்.கே. நகர் தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெற்றதா, இல்லையா, தவறு நடைபெற்றிருந்தால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா போன்றவற்றிற்கு உரிய, உண்மையான விளக்கம் தமிழக மக்களுக்கு தெரியவரும்போதுதான் வரும் காலங்களில் பொது மக்களுக்கு தேர்தலில் முழு நம்பிக்கை ஏற்பட்டு, வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க முன்வருவார்கள்.
எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா சம்பந்தமாக சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் இனிவரும் காலங்களில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நடைபெற வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.