

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதியதில் தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு சபாபதி நகரை சேர்ந்தவர் ஆதிகேசவன் (37). நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி அம்பிகா (30), இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அம்பிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது தாயார் சந்திரா (54) ஓட்டேரியில் இருந்து வந்திருந்தார். பழவந்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரும் நேற்று காலை சென்றனர்.
அம்பிகாவைப் பரிசோதனை செய்த மருத்துவர், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினார். கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயிலில் ஏறுவதற்காக இருவரும் பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
தண்டவாளத்தைக் கடந்த போது, சந்திரா வைத்திருந்த பணப்பை கீழே விழுந்துவிட்டது. சிகிச்சை செலவுக்கான ரூ.9 ஆயிரம் பணத்தை அதில்தான் சந்திரா வைத்திருந்தார். அதை எடுப்பதற்காக இருவரும் மீண்டும் தண்டவாளப் பகுதிக்குச் சென்றபோது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.
தாம்பரம் ரயில்வே போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.