

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்தும் வகையில் சென்னையில் விரைவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ளார். டெல்லி வெற்றியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 2.5 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.லெனின் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சேர்ந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திராவிடக் கட்சிகளின் நிர்வாகிகள் எங்களிடம் பேசி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் தலைவர்களை நாங்கள் தேடவில்லை.
சாமானிய மக்களைத்தான் நம்பி இருக்கிறோம். இவர்களுக்காக மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சியின் மாநாடு சென்னையில் இம்மாத இறுதி அல்லது பிப்ரவரியில் நடத்தப்படும்’’ என்றார்.