

இலங்கையில் நடந்து முடிந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் பங்கேற்றுள்ள செயல் தமிழக மக்களை அவமதித்ததற்கு சமமாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை திட்டக்குடி வந்த திருமாவளவன் நிருபர்களிடம் பேசியதாவது: “வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையம் கூடுகிறது. அதற்குள் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணையை ராஜபக்சே தொடங்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைப் பின்பற்றி இந்திய அரசு நாடாளுமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறோம். ஏற்காடு தேர்தலில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது. சாதி ரீதியாக வன்முறையைத் தூண்டி அரசியல் ஆதாயம் பார்க்கும் முயற்சியில் ஈடு படுவோரை அடையாளம் கண்டு, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார் திருமாவளவன்.