

சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தீனதயாள் பழமையான சிலைகளை கண்டுபிடித்து திருடியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி, 71 கற்சிலைகள், 41 ஐம்பொன் சிலைகள், 75 பழமையான ஓவியங் களை பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் அனைத்தும் சுமார் ஆயி ரம் ஆண்டுகள் பழமையானவை. வீட்டில் இருந்த மான்சிங்(58), குமார்(58), ராஜாமணி(60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த தீனதயாள் கடந்த 3-ம் தேதி இரவு 7.30 மணியளவில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலை கள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவல கத்தில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் முன்பு சரண் அடைந்தார்.
285 சிலைகள் 96 ஓவியங்கள்
போலீஸில் தீனதயாள் கொடுத்த வாக்குமூலத்தில், மேலும் பல இடங்களில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். சென்னையிலேயே 3 வீடுகளில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை வீட்டில் சோதனை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி 75 பழங்கால ஓவியங்கள், களிமண் சிலைகள், மர வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள் போன்றவை கைப்பற்றப் பட்டன. சில இடங்களில் மண்ணுக் குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகளையும் போலீஸார் கண்டுபிடித்து தோண்டி எடுத்தனர்.
இதுவரை நடத்திய சோதனை யில் மொத்தம் 285 சிலைகளும், 96 ஓவியங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் சிலைகளை ஆய்வு செய்தனர்.
உதவிய அரசு அதிகாரிகள்
இந்தியாவின் பாரம்பரிய சிலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாது. ஒரு தனிநபருக்கு சொந்தமான சிலையை கொண்டு செல்வதற்குக் கூட இந்திய தொல்லியல் துறையின் அனுமதி சான்று பெற வேண்டும். காதிகிராப்ட் கலை பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு கூட இந்திய தொல்லியல் துறையின் அனுமதி சான்று வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தீனதயாள் எப்படி வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்றார் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தீனதயாளின் சிலை கடத்தல் தொழிலுக்கு போலீ ஸார், சுங்கத்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரி கள் பலர் உதவி செய்துள்ளனர். சிலைகள் அனைத்தும் கன்டெய் னரில் வைக்கப்பட்டு கப்பல்கள் மூலம்தான் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அப்படி கொண்டு செல்லும்போது இந்த சிலைகள் இருக்கும் பெட்டி களை யாருமே சோதனை செய் யாமல் கப்பலில் ஏற்றும் அளவுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். சிலை கடத்தல் தொழிலுக்கு உதவி செய்த அரசு அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறும் போது, ‘சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரின் நெருங்கிய கூட்டாளி தீன தயாள். அவரது வீட்டில் சோதனை செய்தபோது சில வங்கி ஆவணங் களும், அமலாக்கத்துறை ஆவணங் கள் மற்றும் ஒரு டைரியும் சிக்கின. சிலை கடத்தல் தொழிலுக்கு உதவி செய்த அதிகாரிகளின் விவரங்கள் அதன்மூலம் எங்களுக்கு கிடைத் தன. தீனதயாளுக்கு சொந்தமான ‘ஆர்ட் கேலரி’ தேனாம்பேட்டையில் உள்ளது. சிலை கடத்தல் தொழிலுக்கு இதை பயன்படுத்தி உள்ளார்’ என்றார்.
பழமை - கண்டுபிடிப்பது எப்படி?
வெளிநாடுகளில் உள்ள அருங் காட்சியகத்தை சேர்ந்தவர்கள் இணையதளம் மூலம் பழமை யான கோயில்கள் மற்றும் அங்குள்ள சிலைகள் குறித்து அறிந்துகொள்கின்றனர். பின்னர் அந்த சிலைகளை எடுத்துவருவது குறித்து, அதற்கான ஏஜென்ட்களாக இருக்கும் தீனதயாள், சுபாஷ் கபூர் போன்றவர்களிடம் தொடர்பு கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள இவர்கள் அந்த கோயிலின் முகவரியை தெரிந்து கொண்டு, ஏற்கெனவே பழக்கப்பட்ட திருடர் கள் மூலம் அந்த சிலைகளை திருடிக் கொண்டு வந்துவிடுகின்றனர்.
இப்படி திருடப்படும் பழமையான சிலைகள் அபர்ணா ஆர்ட் கேலரியில் வைத்து பார்சல் செய்யப்பட்டு கேரளா அல்லது ஆந்திர மாநிலத்தில் உள்ள தீனதயாளின் ஆர்ட் கேலரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பின்னர் அங்குள்ள காதிகிராப்ட் அல்லது சிற்ப கூடங்களில் இருந்து வாங்கப்பட்டது போலவும், அவர்கள் சென்னையில் உள்ள அபர்ணா ஆர்ட் கேலரிக்கு அந்த சிலைகளை விற்பனை செய்வது போலவும் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, மீண்டும் சிலைகள் சென்னை அபர்ணா கேலரிக்கே வருகின்றன. பின்னர் இங்கிருந்து அந்த சிலைகள் கன்டெய்னரில் அடைக்கப்பட்டு மும்பை அல்லது சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கப்பல்களில் இந்த சிலைகள் இருக்கும் பார்சல்களை சோதனை செய்யாமல் அனுப்புவதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர்.
தீனதயாள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பலருக்கு இவ்வளவு சிலைகள் அங்கிருப்பது தெரியவில்லை. அவரது கார் ஓட்டுநர் ராமச்சந்திரன், வாட்ச்மேன் கமலக்கண்ணன், கட்டிட வேலை செய்த கணேசன் உட்பட பலருக்கு தீனதயாள் செய்யும் தொழில் குறித்து தெரியவில்லை. இதை அறிந்து போலீஸாரே ஆச்சரியப்பட்டனர்.
அதிகாரிகள் ஆலோசனை
சிலை கடத்தல் சம்பவம் தொடர் பாக அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அறநிலையத்துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனர். அப்போது, சிலை கடத்தல் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பழங்கால கோயில்களில் உள்ள சிலைகளின் விவரங்கள் கணினி மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அறநிலையத் துறையின் சேலம், கும்பகோணம், திருவாரூர் சிலை பராமரிப்பு மையங்களில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு, கடந்த காலங்களில் தொலைந்துபோன சிலைகள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள், அவற்றில் மீட்கப்பட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன. கோயில் சிலைகளின் பாது காப்பை மேம்படுத்த வேண்டும், சிதிலமடைகிற நிலையில் உள்ள பழமையான சிலைகளை பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.