Last Updated : 18 May, 2017 07:59 AM

 

Published : 18 May 2017 07:59 AM
Last Updated : 18 May 2017 07:59 AM

பிளஸ் 1 பொதுத் தேர்வு அறிவிப்பு: அரசின் நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு

வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை கல்வியாளர் கள் வரவேற்றுள்ளனர்.

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு குறித்து கல்வியாளர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:

பிரின்ஸ் கஜேந்திரபாபு:

9, 10-ம் வகுப்பைப் போல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் தனித்தனி வகுப்புகள் கிடையாது. இளநிலை பட்டப்படிப் புக்கு முந்தைய ஒருங்கிணைந்த ஈராண்டுக் கல்வியே மேல்நிலை முதலாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு. எனவே, இரண் டாண்டும் பொதுத் தேர்வு நடத்து வதே சரியானது என்று கல்வியா ளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு அதனை ஏற்றிருப் பது வரவேற்புக்கு உரியது.

தற்போது பிளஸ் 1 தேர்வானது அந்தந்த மாவட்ட அளவில் பொதுத் தேர்வாக நடக்கிறது. இனி அது மாநில அளவிலான பொதுத் தேர் வாக நடைபெறும். இதன் மூலம் பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந் தாலும், பட்டப் படிப்பு போல பிளஸ் 2 படித்துக்கொண்டே பெயிலான பிளஸ் 1 பாடத்தையும் எழுதும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும். நிறைய மாற்றங் கள் தேவைப்படுகிற நம் கல்வித் துறையில், அடுத்தடுத்து எடுக்கப் படுகிற தொடக்க மாற்றங்கள் மகிழ்ச்சி தருகின்றன. அடுத்ததாக பாடத்திட்டத்தைத் தரம் உயர்த் துவதற்கான முயற்சியில் கல்வித்துறை இறங்க வேண்டும்.

பிரபா கல்விமணி:

பிளஸ்1, பிளஸ் 2 இரண்டு ஆண்டுகளும் தலா 600 மதிப்பெண்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தி, ஒட்டுமொத்தமாக மேல்நிலைக் கல்வியில் 1200-க்கு எவ்வளவு என்று மதிப்பெண் அளிப் பதே சரியான முறை. ஆந்திரா, தெலங்கானாவில் இந்த முறை கடைபிடிக்கப்படுவதால்தான், தொடர்ந்து அகில இந்திய நுழை வுத் தேர்வுகள் அனைத்திலும் அம் மாநில மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.

குழப்பமான அரசியல் சூழ்நிலை யிலும் பள்ளிக்கல்வித் துறையில் நல்ல பல மாற்றங்களைச் செய்து வரும் அமைச்சருக்கும், அதிகாரி களுக்கும் நன்றி. வெவ்வேறு தேர்வு முறை இருந்ததால்தான், இதுவரை யில் மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்தது. இனி அந்தப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும்.

இன்னொரு மாற்றத்தையும் செய்ய வேண்டும் என விரும்பு கிறோம். மாணவர்களின் படிப்புச் சுமை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, காலாண்டுத் தேர்வு எழுதிய பாடங்களை திரும்பவும் அரையாண்டுத் தேர்வுக்கோ, அரை யாண்டில் படித்த பாடங்களை மீண்டும் முழு ஆண்டு தேர்வுக்கோ படிக்கத் தேவையில்லை. 9-ம் வகுப்பு வரையில் இம்முறையைக் கடைபிடிக்கும் அரசு, 10-ம் வகுப் பில் மட்டும் ஒட்டுமொத்தப் பாடத் தையும் படிக்க வைப்பது மாணவர் களுக்கு மன அழுத்தத்தைத் தரு கிறது. எனவே, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வையும் முப்பருவத் தேர்வாக நடத்தினால் மாணவர் களின் சிரமம் குறைவதுடன், 9-ம் வகுப்புப் பாடம் புறக்கணிக்கப் படுவதைத் தவிர்க்கவும் முடியும்.

எஸ்.எஸ்.ராஜகோபாலன்:

பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற யோசனை முன்பே மேல்நிலைக் கல்வி மற்றும் தேர்வு வாரியங்களால் பரிசீலிக்கப்பட்டதுதான். ஆனால், மாணவர்களை 10, 11, 12 என்று தொடர்ந்து மூன்றாண்டுகள் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வைப்பது உடல் மற்றும் மனதள வில் அழுத்தத்தைத் தரும் என்பதால் தான் அது கைவிடப்பட்டது. ஒரு தேர்வில் தோல்வியடைந்தாலும், அவர்களது படிப்பு அதோடு நின்று விடும் அபாயமும் உள்ளது.

11, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது மருத்து வம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளில் சேர விரும்பும் மாண வர்களைக்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. இந்த இரண்டு படிப்பையும் தேர்வு செய்ய விரும்பாத மற்ற 7 லட்சம் மாணவர்களுக்கும் இது தேவையற்ற சுமைகளைக் கூட்டும்.

பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை நடத்தாதத் தனியார் பள்ளிகளின் முறைகேடுகளை தீவிரக் கண் காணிப்பின் மூலம் தடை செய்ய வேண்டுமேயொழிய அப்பாவி மாணவர்களைச் சிரமப்படுத்துவது சரியான முடிவல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x