

வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் ரூ. 17 ஆயிரம் கோடி கல்விக்கடன் பெற்றுள்ளனர். அதில் ரூ. 1,875 கோடி மட்டுமே வாராக் கடனாக மாறியுள்ளது. இதில் பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கொடுத்த கல்விக் கடன் ரூ. 847 கோடி. இதனை வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எஸ்பிஐ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
“வாங்கிய கடனை செலுத்தாவிட்டால் மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இதனால் கடன் பெற்ற மாணவர்களின் குடும்பத்தினர் பெரும் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளனர்.
இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட வேண்டும். வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டும். வாராக்கடனை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எஸ்பிஐ விற்பனை செய்தது தொடர்பாக மத்திய பாஜக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எஸ்பிஐ செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு எஸ்பிஐ ரூ. 847 கோடி கல்விக் கடன் கொடுத்துள்ளது. இது மக்களுக்குச் சொந்தமான பணம். இக்கடன் ரூ. 381 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 381 கோடியையும் ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தமாக செலுத்தாது. ரூ. 54 கோடியை உடனடியாகவும், மீதமுள்ள தொகையை 15 ஆண்டுகளுக்குள் செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமா? அல்லது ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமா?
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எஸ்பிஐ செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்களின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.