

சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் துணைநிலை ஆளுநருடன் பேசித் தீர்ப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். சட்ட வரம்பின்படி செயல்படுவதாக கிரண்பேடி கூறினார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி பத்திரிகை யாளர்கள் சந்திப்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். இச்சந்திப்பில் முதல்வர் நாராயணசாமியும் பங்கேற்றார். கூட்டத்தில் கிரண்பேடி கூறியதாவது:
அரசியல் சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகார வரம்பின்படி நான் செயல்பட்டு வருகிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளதால் மத்திய அரசின் நிதியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. மத்திய அமைச்சர்களை அணுகி விமான நிலையம், ரயில், நீர்வழிப் போக்குவரத்து வரைபடத்தில் புதுவையையும் இடம்பெறச் செய்வோம். இதன் ஒரு பகுதியாகத்தான் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.
முதல்வர் நாராயணசாமி கூறும்போது, “புதுச்சேரியின் வளர்ச்சிக்குப் பாடுபடும் நோக்கத்தில் நானும், ஆளுநரும் உள்ளோம். எம்பிக்கள் முதல்வராவதும், முதல்வராக இருப்பவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வதும் அரசியல் வாழ்க்கையில் சகஜம். நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பேசித் தீர்த்துவிடுவோம். பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாகவோ, பிடிக்காத எந்த செயலையும் எனது அரசு செய்யாது” என்று தெரிவித்தார்.