கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் குழு : தே.மு.தி.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் குழு : தே.மு.தி.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Updated on
2 min read

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தே.மு.தி..க., தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தே.மு.தி.க. துவங்கி பத்து ஆண்டை எதிர்நோக்கும் இவ்வேளையில் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி, கட்சியின் மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளதை இப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் எட்டுமணி நேரம் மின்வெட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்சினையைத் தீர்த்திட போர்க்கால நட வடிக்கை எடுக்க வேண்டுமென இப் பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படையான வசதிகள் கிடைப்பதற்கு தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் வணிக வளாகங்களில் எலைட் என்ற பெயரில் ஏ.சி., வசதிகளுடன் மதுக்கடைகளை திறந்துள்ளது. இதுபோன்ற மதுக்கடைகள் திறப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வசதி வாய்ப்புகளுக்காகவும் சந்தோஷத்திற் காகவும் கொடநாடு முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் அலுவலகத் திற்கு தமிழ்நாட்டின் அனைத்து துறை அலு வலர்களும் விமானம் மற்றும் சொகுசு வாகனங்களில் தினந்தோறும் சென்று வருகின்றனர். அதற்கு செய்யப்படுகின்ற செலவுகள் அனைத்துமே மக்களின் வரிப் பணமாகும். இப்படி மக்கள் பணத்தை வீணடிப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தாகக் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்து வமனையாக மாற்றும் நோக்கில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு, அதற்குரிய மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு இல்லை என்று அரசாணையில் அறிவித்துள்ளது. இடஒதுக்கீடு கொள்கைக்கு மாறாக செயல்படும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

பாலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. விற்பனை செய்யப்படும் பாலின் விற்பனை விலையை உடனடியாகக் குறைக்க வேண்டு மென இப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

இறந்த மாடுகளுக்கு கர்நாடக மாநிலம் இழப்பீடு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டுமெனவும் இப் பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டு காலமாக வந்து சேரவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இழப்பீடு அளிக்காததை இப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் முள்வேளியில் இருந்து அவரவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென இப் பொதுக்குழு வலியுறுத்து கிறது.

மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசோடு நல்ல தீர்வு காணப்பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை இப்பொதுக்குழு கட்சியின் நிறுவனத் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்திற்கு ஏகமானதாக வழங்கி தீர்மானிக்கின்றது.

தே.மு.தி.க. சார்பில், 2014 நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அக்குழுவை இப்பொதுக்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கிறது என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in