

ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக கைது செய்யப்பட்ட வைத்தியநாதனின் ஜாமீன் மனுவை விழுப்புரம் நீதிமன்றம் நிராகரித்தது.
ஆவின் பாலில் கலப்படம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த வைத்திய நாதன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு வைத்தியநாதன் கடந்த 25-ம் தேதி விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 29-ம் தேதி இந்த மனுவை நீதிபதி குமார சரவணன் விசாரித்தார்.
இந்த மனு தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி அக்டோபர் 8-ம் தேதிக்கு மனு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைத்தியநாதன் சார்பில் வக்கீல்கள் தினகரன், தமிழரசன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசு சார்பில் வக்கீல் அம்ஜத் அலி ஆஜரானார்.
விசாரணை முடிந்த நிலையில் ஜாமீன் மீதான தீர்ப்பை 9-ம் தேதிக்கு நீதிபதி குமார சரவணன் ஒத்திவைத்தார். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வைத்தியநாதன் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.