

ரமோன் மகசேசே விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.எம்.கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிலிப்பைன்ஸ் நாட்டு அரசினால் வழங்கப்படும் மகசேசே விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் உயர்ந்த விருதாகும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ் பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவரான, ரமோன் மகசேசே நினைவாக இந்த விருது, ஆசிய நாடுகளில் சிறந்த சேவை செய்வோருக்கு 1957ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பணி, பொதுச் சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் நேற்றையதினம் 2016ஆம் ஆண்டுக்கான மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளுக்கு மூன்று தனி நபர்கள், மற்றும் மூன்று அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து, இந்த ஆண்டு, இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப்பாடகரான, டி.எம். கிருஷ்ணாவும், கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரமான கலைஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்படும் டி.எம். கிருஷ்ணாவுக்கும், தலித் குடும்பத்தில் பிறந்து, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் சுமக்கும் கொடுமையால் குமுறி அந்த அவலத்தை ஒழிப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெஸ்வாடா வில்சனுக்கும் இந்த ஆண்டுக்கான மகசேசே விருது கிடைத்துள்ளமைக்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றி கூறியுள்ளார்.