

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. இதில், இலங்கை விவகாரம் குறித்து இம்மாதம் 22-ம் தேதி (நாளை) விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கைப்படி அண்டை நாடான இலங்கையுடன் நட்பாக இருக்க விரும்புகிறது. ஆனால், இலங்கை கடந்த 2009-ம் ஆண்டு முதல் தமிழக எல்லைக்குள் தொடர்ந்து பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை இந்தியாவுடன் தொடர்ந்து நட்பு நாடாக இருக்க விரும்பவில்லை. சீனாவுக்கு தனது ஆதரவுக் கரத்தை நீட்டத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக திரிகோணமலையில் சீனா தனது ராணுவத் தளத்தை அமைத்துள்ளது. சீனா-இலங்கை இடையே ராணுவம் மற்றும் சிவில் உறவுகள் வளர்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். தமிழர்கள் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணாத வரையில் அமைதி நிலவாது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே, இலங்கை அரசுடனான இந்தியாவின் வெளியு றவுக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.