Last Updated : 05 Sep, 2016 11:16 AM

 

Published : 05 Sep 2016 11:16 AM
Last Updated : 05 Sep 2016 11:16 AM

3 மாதங்களாக தலைவர் இல்லை: உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? - தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பம்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இதனால், உள்ளாட்சித் தேர்தலை யார் தலைமையில், எப்படி சந்திப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஒருவர் ‘தி இந்து‘விடம் கூறியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய பலம் உள்ளது. 2006 உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகளை காங்கிரஸ் தன் வசமாக்கியது. நிறைய நகராட்சிகள் மற்றும் ஒன்றியக் குழுக்களிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 2011 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போதும் 24 பேரூராட்சிகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் கைப்பற்றினர். நகராட்சி, மாநகராட்சிகளில் காங்கிரஸுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு கவுன்சிலர்களும் கிடைத்தனர். பாரம்பரியமாகவே பல கிராம பஞ்சாயத்துக்களில் காங்கிரஸுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி உள்ளது.

இந்நிலையில், 2016 உள்ளாட்சித் தேர்தலை காங்கிரஸ் தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவிடம் அதிக இடங்கள் கேட்கப்பட்டது. ஆனால், 41 இடங்களைத் தந்த திமுக, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்களைத் தருவதாக உறுதி அளித்தது.

இளங்கோவனின் ராஜினா மாவுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்குறறற தலைவர் நியமிக்கப்படவில்லை. தலைவர் இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி தொண்டர்களுக்கு எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை திமுக எப்படி நடத்தப்போகிறது, இடங்களை எப்படி பிரித்துக் கொடுக்கும், காங்கிரஸுக்கு புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைவர் திமுகவுக்கு சாதகமானவராக இருப்பாரா என்ற பல கேள்விகள் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. இதனால், தேர்தல் வேலைகளை தொடங்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணாவிடம் கேட்ட போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் முதல் கூட்டணி பேச்சுவார்த்தை வரை மாநிலத் தலைவரின் பங்களிப்பும் வழிகாட்டுதலும் அவசியமான ஒன்றாகும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான எந்த வேலையையும் காங்கிரஸ் கட்சி தொடங்கவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x