

அமைச்சருடனான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அரசுப் பேருந்துப் போக்குவரத்து ஊழியர்கள் மே 15-ம் தேதி முதல் (திங்கள்) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறுதி செய்துள்ளனர்.
பல இடங்களில் ஏற்கெனவே போராட்டம் தொடங்கிவிட்டதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அரசுப் பேருந்துகள் முழுதும் இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்பட பிரச்சினை குறித்து, 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட வில்லை.
12 ஆவது ஊதிய ஒப்பந்த காலம் கடந்தாண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதி முடிந்த நிலையில், 13 ஆவது ஊதிய ஒப்பந்தம் இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை.
நிலுவை தொகையாக ரூ.750 கோடி ஒதுக்கப்படும் என அரசு கூறியது. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இன்றைய 6 ம் கட்ட பேச்சும் தோல்வியில் முடிந்தது. எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. வரும் செப்டம்பருக்குள் நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடியில், ரூ.1,250 கோடியை வழங்க அமைச்சர் உறுதியளித்தார். இதனை ஏற்பதா வேண்டாமா என்பது பற்றி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இறுதியில் அமைச்சரின் வாய்மொழி உத்தரவை நம்ப முடியாது என்றும் ஸ்டிரைக்கில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளதாக சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
நீலகிரி, திருச்சி, வேலூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஏற்கெனவே போராட்டத்தைத் தொடங்க்விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்தி விட்டு போராட்டம் தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள், 56 புறநகர் பேருந்துகள், இயக்கப்படாமல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே.15-ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பயணிகளுக்கு கடும் சிரமங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.
பேருந்தை இயக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது, அதாவது பணிமனை ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.