

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி - மக்களின் மவுனப் புரட்சியைக் காட்டுவதாக, பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றியின் மூலம் இந்திய மக்கள் எதிர்பார்த்த ஆட்சிமாற்றத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தி உள்ளது.
தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பியே வெற்றி பெற செய்துள்ளார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மவுனப் புரட்சியை போல் தற்போதும் மக்கள் மவுனமாக இருந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.