

தேமுதிகவில் இருந்து வருத்தத்துடன் பிரிவதாக, அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அனுப்பிய கடிதத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக கட்சிப் பொறுப்பு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், "எனக்கு உடல்நிலை சரியில்லாததாலும், மருத்துவர் ஓய்வெடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதாலும் இன்று (டிச.10) அரசியலில் இருந்து விலகி ஓய்வுபெற முடிவுசெய்துள்ளேன்.
ஆகவே, தேமுதிக சார்பில் வகிக்கும் அவைத்தலைவர் உள்பட அனைத்துக் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்.
கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடன் பணியாற்றியபோது, தாங்கள் என்னிடம் காட்டிய நல்லெண்ணத்தையும், நன்மதிப்பையும், பெருந்தன்மையையும் என்றும் மறவேன்.
அதேபோல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காட்டிய பாசத்துக்கு எனது இதயமார்ந்த நன்றி. சேரும்போது மகிழ்ச்சியும் பிரியும்போது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆலந்தூர் தொகுதி மக்கள் ஒரு தாய் போல என்னிடம் காட்டிய அன்பை எப்போதும் மறக்க மாட்டேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.