

சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவ னத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் ஏவுகணை நாயகரும், இளைஞர்களின் கனவு நாயகருமான முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் நாடெங்கும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது கனவுகள், லட்சியங்களை மனதில் கொண்டு நாட்டுக்காக உழைக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
மனதை வென்ற கலாம்
எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த அப்துல் கலாம், இந்தியா வின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது என அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். மாணவர்களின் மனம் கவரும் பேராசிரியராகத் திகழ்ந்த அவர், வித்தியாசமாக சிந்திக்கும் தைரியம், துணிச் சலாக புதிய கண்டுபிடிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, சவால்களை சந்தித்து வெற்றி பெறும் மனவலிமை ஆகியவை இளைஞர்களின் பிரத்யேக குணங்கள் எனக் கருதியவர்.
மாணவர்கள், இளைஞர்களின் மனதை வென்ற அப்துல் கலாமுக்கு நினைவிடம் கட்டும் பணி அவர் மறைந்து ஓராண்டுக்குப் பிறகே தொடங்கியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இனியாவது தாமதம் இன்றி நினைவிடம் அமைக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்,
கடந்த ஆண்டு ராமேஸ் வரத்தில் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மனிதநேய மிக்க அப்துல் கலாமின் நினைவு நாளில் அவரது கனவுகள், லட்சியங்களை தொய்வின்றி நிறைவேற்ற உறுதி யேற்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.