

பிஎஸ்சி உயிரி வேதியியல் பட்டதாரிகளை பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களாக நியமனம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர்கள் கே.ரம்யா, பி.பிரபு. பிஎஸ்சி உயிரி வேதியியல் பட்டதாரிகளான இருவரும், கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 5.1.2010-ல் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 2012-ல் இருவரும் பணி நிரந்தரம் செய்யப் பட்டனர். இந்நிலையில் பிஎஸ்சி வேதியியல் பட்டதாரிகளை மட்டுமே அறிவியல் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும். இருவரும் பிஎஸ்சி உயிரி வேதியியல் படித்திருப்பதால் அவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்தது செல்லாது என ஆசிரியர் ஒன்றியம் புகார் அனுப்பியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் 8.9.2016-ல் பணி நீக்கம் செய்து கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்து இருவரின் பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னரும் இருவரும் பணியி்ல் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து கள்ளர் சீரமை ப்புத்துறை இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை இருவரும் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சந்திரசேகர் வாதிட்டார். விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்குகளில் பிஎஸ்சி உயிரி வேதியியல் படிப்பு பிஎஸ்சி வேதியியல் படிப்புக்கு சமமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பிஎஸ்சி உயிரி வேதியியல், பிஎஸ்சி வேதி யியலுக்கு இணையான படிப்பு என 1998-ல் அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2009-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பயிற் றுவிக்கப்படும் பிஎஸ்சி உயிரி வேதியியல் படிப்பை அரசு வேலைகளி்ல் பிஎஸ்சி வேதியியல் படிப்புக்கு இணையானதாகக் கருதக்கூடாது என அரசு உத்த ரவிட்டது. இதை பின்பற்றி 2011, 2013-ல் அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டன.
இருப்பினும் மனுதாரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டபோது 1998-ம் ஆண்டின் அரசாணை மட்டுமே அமலில் இருந்துள்ளது. அந்த அரசாணை அடிப்படையில் பிஎஸ்சி உயிரி வேதியியல் படிப்பை பிஎஸ்சி வேதியியல் படிப்புக்கு இணையாக கருதலாம். எனவே, மனுதாரர்களின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது. மேலும், மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை அடிப் படையில் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் சேர்ந்து 6 ஆண்டுக்கு பிறகு அவர்களின் நியமனம் செல்லாது என்பதை ஏற்க முடியாது.
மனுதாரர்களின் நியமனம் சட்டவிரோதமாக இருந்தால் முதலில் அவரை நியமனம் செய்த அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மனுதாரர்கள் நியமனம் சட்டவிரோதம் என்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. எனவே அவர்களை பணி நீக்கம் செய்து கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். பணித்தொடர்ச்சி, பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.