

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிகள் கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ராமேசுவரத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 11 மீனவ சங்க பிரதிநிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மாலையில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த தகவல் வெளியானதும் ராமேசுவரம் மீனவர்கள் கொதிப்படைந்தனர். ஆண்கள், பெண்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் பாம்பன்-தங்கச்சிமடம் இடையே சாலைகளில் நேற்று மாலை 4 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கூட்டம் சேர, சேர பலரும் ஆத்திரமடைந்தனர். தங்கச்சிமடம் அருகே ரயில்வே தண்டவாளத்தை தகர்த்தெடுத்தனர். இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் பல நூறு பேர் சேர்ந்து 2 மணி நேரத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாள கட்டைகளை வளைத்து சேதப்படுத்தினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில், விடிய விடிய ராமேசுவரத்தில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டதால், இன்று காலை அரசு, தனியார் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டது.
போக்குவரத்து சீரானது:
காலை முதல் ராமேசுவரத்தில் பேருந்து போக்குவரத்து சீரானது. தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து பகல் 12 மணிக்கு ரயில் போக்குவரத்தும் சீரானது.
சுற்றுலா பயணிகள் தவிப்பு:
தீர்ப்பு வெளியானதில் இருந்து போராட்டங்கள் வலுப்பெற்றதால், வியாழக்கிழமை மாலை முதலே சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்கள், பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணம் ரத்தானதால் இரவில் விடுதிகளில் தங்க நேர்ந்தது. விடுதிகள் பலவற்றிலும், கட்டணம் ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். இருப்பினும் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது.