

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவர்கள் 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14-ம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான அனில் சில்வா, ஷராஃபி மொஹிதீன், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்தனர்.