

கோஷ்டி சண்டையில் மூழ்கிப்போய், தமிழ்நாட்டின் உரிமைகளை பலியிட்டுவரும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் திராணியற்று நிற்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த ஜனநாயக விரோதச் செயலை கடுமையாக விமர்சித்து, குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதையும் அதிமுக அரசு மதிக்கவில்லை.
இப்போது உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை தனி அதிகாரிகள் மூலம் நடத்த மேலும் 6 மாத கால நீடிப்புக்கு வழிசெய்யும் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
வரலாறு காணாத வறட்சியும், குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறித்துள்ள அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கோஷ்டி சண்டையில் மூழ்கிப்போய், தமிழ்நாட்டின் உரிமைகளை பலியிட்டுவரும் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் திராணியற்று நிற்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் செயல்படும் ஜனநாயக உரிமைகளை பறித்துக் கொண்ட அதிமுக அரசு மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது என எச்சரிக்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.