Published : 29 Oct 2013 09:41 AM
Last Updated : 29 Oct 2013 09:41 AM

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க அரசின் சமூகநலத் துறை எடுத்த நடவடிக்கையால், 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை, 976 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், பட்டியலில் இடம்பெறாத ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலைக்கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களை ஆய்வு செய்தனர். இதில், 80 சதவீத குடும்பங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்குத் திருமணம் நடப்பது அம்பலமானது. 18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது நிரம்பாத ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம்.

இதுகுறித்து, ‘சுடர்’ தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜன் கூறியதாவது:

எங்கள் அமைப்பு சார்பில், பர்கூரை அடுத்த கொங்காடை மலைப்பகுதியில், உண்டு உறை விடப் பள்ளி நடத்தி வருகிறோம். இங்கு ஆறாவது படித்து வந்த மாணவி சுமதிக்கு (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திடீரென திருமணம் நடந்தது. கடைசி நேரத்தில் தகவல் தெரிந்ததால் தடுக்க முடியவில்லை.

இதுபோல பள்ளியில் சமையல் பணி பார்க்கும் ஒருவர், ‘ புள்ள அத்துகிட்டு வந்திடுச்சுங்க... பணத்தைத் திரும்ப கொடுக்கணும். 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்’ என்றார்.

11 வயதான அவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞரை திருமணம் செய்த அந்த சிறுமி, முதல் இரவன்று பயந்துபோய் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். இதனால் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் வாங்கிய தொகையை திருப்பித்தர பணம் வேண்டும் எனக் கேட்டார்.

விசாரித்தபோதுதான், மலைக்கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடப்பது தெரிந்தது. 12 வயதில் திருமணம், 13 வயதில் கர்ப்பம், 14 வயதில் பிரசவிக்க தேவையான உடல், மனரீதியான பக்குவம் இல்லாமல் மரணமடையும் சம்பவங்கள் சர்வசாதாரணமாய் நடக்கின்றன என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தாளவாடி, கடம்பூர் வனப்பகுதி களில் அதிகம் வசிக்கும் லிங்கா யத்து, ஊராளி, சோளகர் ஆகிய பிரிவினர் அதிக அளவில் குழந்தைத் திருமணங்களை நடத்திவருவது தெரியவந்துள்ளது. மலைவாழ் குழந்தைகள் கல்வி கற்கப் போதுமான பள்ளிகள் இல்லா ததுதான் இந்த அவலம் அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள ஒருசில பள்ளிகள் 8-ம் வகுப்பு வரைக்கும் மட்டுமே உள்ளது. தாய், தந்தை இரு வரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டில் தனியாக பெண் குழந்தையை விட்டுச் செல்ல பயந்து, 13, 14 வயதுள்ள பெண்களை, 20 முதல் 40 வயது வரை உள்ள மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்

மலைக் கிராமம் மட்டுமல்லாது, ஈரோடு நகர் பகுதிகளிலும் தற்போது குழந்தை திருமணங்கள், விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவ தில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குழந்தைத் திருமணங்கள் குறித்து தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், ‘குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில், நமது மாவட்டம் இல்லை’ என்று கூறுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் அந்த அமைப்பினர்.

குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சியாமளாவைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும், அவருடைய விளக்கத்தைப் பெற முடியவில்லை.

'படிக்க வசதி செய்யுங்க'

ஈரோட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கொங்காடை வனப்பகுதியைச் சேர்ந்த 90 வயதான முதியவர் ஜவரையன் (படம்) பேசும்போது, தனக்கு, 6 வயதில் திருமணமானதாகவும், அடுத்த ஆண்டே மனைவி இறந்துவிட்டதாகவும் கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

“எங்க குழந்தைக படிக்கிறதுக்கு வசதி பண்ணிக்கொடுங்கய்யா... 12-வது வகுப்பு வரைக்கும் அந்த குழந்தை படிச்சுதுன்னா, 17 வயசு ஆகிடும்... அதுக்கப்பறமா, ஒரு வருஷத்தில கல்யாணம் பண்ணி வைச்சிடுவோம். உங்க சட்டத்தை ஒத்துகிட்ட மாதிரியும் இருக்கும்... குழந்தைகளையும் காப்பாத்தின மாதிரி இருக்கும்... என்றார். அந்த முதியவரின் குரலில் இருந்த உண்மையும் தெளிவும் அரசின் காதுகளைச் சென்றடைந்தால் பல மாற்றங்கள் நடக்கும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x