

சிவகாசி அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், அறிவியல் ஆராய்ச்சிக்காக ரஷ்யா செல்ல ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது குறித்த செய்தி 'தி இந்து' தமிழ் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் இச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடிவிபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருந்தார். இதன்மூலம் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ரஷ்யா செல்லும் இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இணைந்தார்.
அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும் எனவும் அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது.
ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக ரூ.1.75 லட்சத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா? என்ற தலைப்பில் 'தி இந்து' தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகுமார் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் எனக்குப் பெரியளவில் ஈடுபாடு இல்லை. என்னுடைய மனைவிதான் இந்த செய்தியைப் பாருங்கள் என்று கூறினார். பார்த்தவுடன் உடனே அந்த மாணவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. நாரணாபுரம் என் சொந்த ஊர். என்னுடைய அம்மா அங்கேதான் அரசுப்பள்ளியில் படித்தார். எப்போது இந்தியா வந்தாலும் என் சொந்த ஊருக்குச் செல்வேன்.
ரஷ்யாவில் குறிப்பாக மாஸ்கோவில் வசிக்கும் நாம் ஏன் ஜெயக்குமாருக்கு உதவக்கூடாது என்று தோன்றியது. எதையும் யோசிக்காமல் உடனே ஆசிரியரை அழைத்துப் பேசிவிட்டேன்'' என்றார்.
ஒன்றேமுக்கால் லட்சம் பணத்தை அளிப்பது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டதற்கு, ''ரஷ்யாவில் கண் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறேன். இந்தப் பணம் எனக்குப் பெரிய தொகையாகத் தோன்றவில்லை. எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம். படிப்பை ஊக்குவிக்கவும் செய்யலாம் அல்லவா?
என்னால் கொடுக்கமுடியும் என்ற நிலையில் இருக்கிறேன். கொடுத்துவிட்டேன்!'' என்கிறார் விஜயகுமார்.
இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.