

வியாழனன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறகு சசிகலா ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ரவ் சந்தித்த பிறகு எந்த ஒரு அறிக்கையையும் அனுப்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய் இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய விவகாரங்கள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தையடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்ட புயலுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில் ஓபிஎஸ், மற்றும் சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்தனர்.
இதில் சசிகலா தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். பன்னீர்செல்வம் தனது சந்திப்புக்குப் பிறகு ‘விரைவில் நல்ல செய்தி காத்திருக்கிறது’ என்றும் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்’என்றும் சூசகமாக தெரிவித்தார்.
இதனையடுத்து இருவர் சந்திப்புகளின் பின்னணியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தமிழக அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பியதாக பரவலாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தமிழக அரசியல் நெருக்கடி குறித்து தமிழக ஆளுநரிடமிருந்து குடியரசுத்தலைவருக்கோ, உள்துறை அமைச்சகத்துக்கோ எந்த வித அறிக்கையையும் அனுப்பவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.