Published : 27 Oct 2014 09:54 AM
Last Updated : 27 Oct 2014 09:54 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் கட்டணம் வசூலித்தால் இணையதள மையங்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ரூ.10க்கு மேல் வசூலிக்கும் இணையதள மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் எச்சரித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி இணையதள வசதி கொண்டவர்கள் வாக்காளர் பட்டியலில் எங்கிருந்து வேண்டுமா னாலும் இலவசமாக தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள லாம். இணையதள வசதி இல்லாத வர்கள் இணையதள மையத்துக்கு சென்று பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இணையதள பயன்பாடு பற்றி அறியாதவர் களுக்கு வசதியாக சென்னையில் குறிப்பிட்ட 40 இணையதள மையங்களில் வாக்காளர் பெயர் களை சேர்க்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எந்தெந்த மையங்களில் இந்த வசதி உள்ளது என்ற தகவல் http://www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

இந்த 40 மையங்களில் இணையதள மைய உதவியாளரே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்தை ஸ்கேன் செய்து, தகவல்களை இணையத்தில் பதிவேற்றுவார். இதற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளனவா என்று அறிந்து கொள்ள இந்த இணையதள மையங்களில் ரூ.2 வசூலிக்கப்படும்.

ஆனால், சில மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. தி.நகரில் வசிக்கும் ரா. சுதிர் இதுபற்றி கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தி.நகரில் பர்கிட் சாலையில் உள்ள இணையதள மையத்தில் ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. புகைப்படம் ஸ்கேன் செய்ய தனி கட்டணம், தட்டச்சு செய்ய தனி கட்டணம் என்று வசூலிக் கப்படுகிறது. தெற்கு தண்டபாணி தெருவில் உள்ள ஒரு கடையில் ரூ.30 வசூலிக்கிறார்கள்” என்றார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது: வாக்குச்சாவடி மையங்களில் பதிவு செய்வதை விட, இணைய தளம் மூலம் வாக்காளரின் முன்னிலையிலேயே தகவல்கள் பதிவு செய்யப்பட்டால், தவறுகள் ஏற்படாது என்பதால்தான் இந்த வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு என்று இந்த மையங்கள் தங்கள் கடைகளுக்கு வெளியில் விளம்பரம் செய்திருக்க வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.10க்கு மேல் வசூலிக்கும் இணையதள மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விதிகளை மீறும் மையங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேரடியாகவோ, 1913 என்ற எண்ணிலோ புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x