Published : 02 Apr 2014 01:23 PM
Last Updated : 02 Apr 2014 01:23 PM

என் பின்னணியில் தேவாலயம் இல்லை: எஸ்.பி. உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் இவர் துவக்கிய போராட்டம், அணுசக்தியின் சாதக, பாதகங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அணு உலைக்கு எதிரான தனது வாதத்தை எடுத்துச் செல்ல முடியும் என உதயகுமார் நம்பிக்கையுடன் உள்ளார்.

உதயகுமார் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி.

தென் தமிழகத்தில் உள்ள தேவாலயத்துடன் உங்களுக்கு வலுவான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதை தேவாலயம் எப்படி பார்க்கிறது?

அலுவல் ரீதியாக எனக்கும் தேவாலயத்துக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. அணு உலைக்கு எதிரான எனது போராட்டம் கிறிஸ்துவர்கள் நிறைந்த கிராமத்தில் நடைபெறுகிறது. போராட்ட களத்தில் இருப்பவர்கள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர்கள். அவ்வளவே. என் பின்னணியிலோ இல்லை எந்த ஒரு வேட்பாளர் பின்னணியிலோ தேவாலயத்தின் பங்கு ஏதும் இல்லை.

தேர்தல் களத்தில் தனியாக இறங்குவதை தவிர்த்து ஆம் ஆத்மியுடன் இணைந்துள்ளீர்கள். இது எவ்வகையில் உங்களுக்கு உதவியாக இருக்கும்?

நிச்சயமாக. இது எங்கள் போராட்டத்தின் அடிதளத்தை விரிவாக்க உதவும். இளம், முதல் முறை வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியின் வருகையால் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல் ஊழல் அரசியல் கட்சிகளால் வெறுப்பில் இருக்கும் மக்களும் ஆம் ஆத்மியை ஆதரிக்கின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆதரவு பெருகும் என நம்புகிறேன்.

ஆம் ஆத்மி கட்சி அணுசக்தி தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக்கவில்லை. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை நீங்கள் தேர்வு செய்ய காரணம்?

எங்கள் போராட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நாங்கள் கடிதம் அனுப்பினோம். ஆனால் எந்த ஒரு கட்சியும் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் எங்கள் வழக்கை ஆம் ஆத்மியைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண் வாதாடி வருகிறார். கேஜ்ரிவால் இடிந்தகரைக்கு நேரில் வந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சி எழுத்துப்பூர்வமாக ஆதரவு அளித்துள்ளது, எந்த ஒரு பெரிய திட்டமும் உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல் செயல்படுத்தப்படக்கூடாது என ஆத்மி குறிப்பிட்டுள்ளது. இது எங்கள் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. எங்கள் கொள்கைகளுக்கு பதில் அளிக்கிறது. மேலும், அணு சக்தி தொடர்பாக விரிவான தேசம் தழுவிய விவாதம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சில கட்சிகள் அணுசக்தியை ஆதரிக்கும் பாஜகவுடன் இணைந்துள்ளன. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

மதிமுக, பாமக கட்சிகள் அணுசக்தியை ஆதரிக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அணுசக்தியை ஆதரிக்கும் கட்சியுடனேயே கூட்டணியில் உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. அரசியல் ஆதாயமே இதற்குக் காரணம். இதனாலேயே, தமிழகத்திற்கு வெளியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்துள்ளோம்.

சித்தாந்த ரீதியாக காங்கிரஸ், பாஜக-வை எதிர்த்து வரும் ஆம் ஆத்மி தமிழகத்தில் அக்கட்சிகளை தீவிரமாக எதிர்க்காதது ஏன்?

இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆம் ஆத்மி ஒரு இளம் கட்சி. தமிழகத்தில் இன்னும் இளைய கட்சி. மாநிலத்தில் இன்னும் முழு வீச்சில் கட்சி ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒரு வலுவான ஆளுமையும் கட்சிக்கு தமிழகத்தில் இல்லை. இவையே, காரணமாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி, ஆம் ஆத்மி வெளிநாட்டு நிதி பெறுவதாக குற்றம் சாட்டி வருகிறார். காங். பாஜ கட்சிகளும் வெளிநாட்டு நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

எங்கள் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையானவை. நாங்கள் வெளிநாட்டு நிதியோ, சட்ட விரோத நிதியோ பெற்றதில்லை.

தமிழில் - பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x