

தமிழகத்தில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு பரவலாக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தில் ஆங்காங்கே கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரை முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமத்தி வேலூர், திருச்சி விமான நிலையம், தொழுதூர், சென்னை பச்சையப்பன் கல்லூரி, ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இளையாங்குடி, தர்மபுரி, மானாமதுரை, சென்னை அண்ணா பல்கலைகழகம் ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென் வங்கக் கடலில் ஞாயிற்றுகிழமை உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. இது தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டுள்ளதாகவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை. இதனால் வட தமிழகத்தில் அதிக மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நான்கு அல்லது ஐந்து நாட்களில் அரபிக்கடல் நோக்கி நகரலாம்.
சென்னையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 15.8 மி.மீ மழையும் விமான நிலையத்தில் 25.9 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 28 மற்றும் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்றார் அவர்.