Published : 11 Oct 2014 01:18 PM
Last Updated : 11 Oct 2014 01:18 PM

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய பேய் கணவாய்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்த பாம்பன் மீனவர்கள் வலையில் அரிய வகை 'பேய் கணவாய்' மீன்கள் சிக்கியன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து வியாழக்கிழமை 100–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது மோட்சம் என்பவருக்கு சொந்தமான படகில் 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அவர்களது வலையில் பல்வேறு வகை மீன்களுடன் சுமார் 8 கிலோ எடையுள்ள 7 முதல் 7 அடி நீளம் கொண்ட பேய் கணவாய் என்ற அரிய வகை மீன்கள் இரண்டு சிக்கியது. மீனவர்கள் அந்த மீனுடன் வெள்ளிக்கிழமை கரை திரும்பினார்கள்.

பேய் கணவாய் மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறும்போது, "கடலில் 300-க்கும் மேற்பட்ட கணவாய் இனங்கள் உள்ளன. மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும்போது வலைகளில் ராக்கேட் கணவாய், ஊசி கணவாய், ஒட்டு கணவாய் பேன்ற மீன்கள் கிடைக்கும். ஆனால் இளம் சிகப்பு நிறத்தில் கிடைத்துள்ள இந்த மீனை பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி மற்றும் பேய்க்கணவாய் என்று அழைப்போம். பார்ப்பதற்கு வினோதமாக அச்சத்தை தரக்கூடியதாக இருப்பதால் இதற்கு பேய் கணகாய் என்று பெயர் வந்தது.

பொதுவாக கணவாய் மீன்களுக்கு மூன்று இதயங்களும், எட்டுகால்களும் உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இந்த வகை மிக வேகமாக நீந்திச்செல்லும், அத்துடன் வலைகளில் எளிதில் சிக்காது. ஒரே நேரத்தில் இரண்டு பேய் கணவாய் இனப்பெருக்கத்திற்காக ஒன்று சேரும் போது வலையில் சிக்கியிருக்கலாம். மற்ற வகை கணவாய் மீன்களுடன் ஒப்பிடும்போது பேய் கணவாய் மீனை உள்ளுர் மீனவர்கள் சாப்பிட மாட்டார்கள்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x